ஆசிரமத்தில் இருந்து 5 குழந்தைகளை அழைத்துச்சென்றது குறித்து அறிக்கை

ஆசிரமத்தில் இருந்து 5 குழந்தைகளை அழைத்துச்சென்றது குறித்து அறிக்கை அளிக்குமாறு அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2023-03-18 20:00 GMT

தஞ்சையில் ஒரு ஆசிரமத்தின் மேலாண்மை நிர்வாகியான ஜோதி லோகநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "எங்களது ஆசிரமத்தில் இருந்த 5 குழந்தைகளை தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலர் அழைத்துச் சென்றார். அவர்களை மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இந்த ஆசிரமம் குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கான அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு உள்ளது. எனவேதான் அங்கிருந்த குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர், என்றார்.

விசாரணை முடிவில், அந்த குழந்தைகள் எந்த தேதியில் ஆசிரமத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்? எதன் அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்டனர்? என்பது தொடர்பாக விரிவான அறிக்கையை தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலர் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல அந்த குழந்தைகளின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்