தேங்காய் கடையில் ரூ.5 லட்சம், 7 பவுன் நகை திருட்டு

கருங்கலில் தேங்காய் கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம், 7 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-10-31 18:45 GMT

கருங்கல்:

கருங்கலில் தேங்காய் கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம், 7 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;-

தேங்காய் கடை

கருங்கல் கருமாவிளை பகுதியைச் சேர்ந்தவர் அலங்காமணி மகன் ராஜேஷ் (வயது 43). இவர் கருமாவிளை சந்திப்பில் தேங்காய் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடையில் இனிப்பு மிட்டாய் உள்ளிட்ட பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்து பார்த்த போது ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

பணம், நகை திருட்டு

அதிர்ச்சி அடைந்த அவர் பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்தார். அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மற்றும் 7 பவுன் நகையை காணவில்லை.

மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியிருக்கலாம் என தெரியவந்தது.

உடனே இதுகுறித்து அவர் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. அதே சமயத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என ஆய்வும் நடந்து வருகிறது.

இந்த துணிகர திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்