பெண் எஸ்.ஐ தற்கொலை வழக்கு: மீஞ்சூர் காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித் சஸ்பெண்ட்

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் எஸ்.ஐ அந்தோணி மாதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2025-12-15 19:00 IST

அம்பத்தூர்,

சென்னை அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தவர் அந்தோணி மாதா(வயது 31). விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு, யோவான் என்பவருடன் 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக அந்தோணி மாதா, கணவரை பிரிந்து அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

2021-ம் ஆண்டு இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்தார். அப்போது அவருடன் பணியில் சேர்ந்த மற்றொரு ஆண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 வருடங்களாக இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்தோணி மாதாவிடம் பேசுவதை அந்த சப்-இன்ஸ்பெக்டர் குறைத்துக்கொண்டதாக தெரிகிறது. இதனால் அந்தோணி மாதா மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தோணி மாதா, அந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் செல்போனில் வீடியோ காலில் பேசினார். உடனடியாக தன்னை பார்க்க வரும்படி கூறினார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.அதற்கு அந்தோணி மாதா, “என்னை பார்க்க வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்” என கூறினார். ஆனால் அடிக்கடி அவர் இதுபோல் மிரட்டி வந்ததால் அதனை சப்-இன்ஸ்பெக்டர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிகிறது. உடனடியாக செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.எனினும் சிறிதுநேரம் கழித்து அவர், அந்தோணி மாதாவுக்கு போன் செய்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் உடனடியாக அந்தோணி மாதா வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அந்தோணி மாதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே தந்தையை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அவரது 2 மகன்களுமதவித்து வருகிறார்கள். இது சக போலீசார் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே பெண் எஸ்.ஐ தற்கொலை வழக்கு தொடர்பாக மீஞ்சூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாராக பணியாற்றி வரும் ரஞ்சித் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட அந்தோணி மாதா குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் எஸ்.ஐ. ரஞ்சித் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்