திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூண் இல்லை - தர்கா தரப்பு வாதம்

தனி நீதிபதி விசாரணையின்போது எங்கள் கருத்துக்களை முழுமையாக கூற முடியவில்லை என தர்கா தரப்பு தெரிவித்துள்ளது.;

Update:2025-12-15 18:40 IST

மதுரை,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று காலை முதல் நடந்தது. முதலில் கோவில் நிர்வாகம் தரப்பிலும், பின்னர் அறநிலையத்துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதன் பின்னர் தர்கா தரப்பில் வாதங்கள் நடைபெற்றது. தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் வாதங்களை முன்வைத்தார். அப்போது நீதிபதிகள், தூணானது தர்காவில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் உள்ளதா என கேள்வியெழுப்பினர். மேலும், 1994-ம் ஆண்டு தர்கா தரப்பு, கோவிலுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்தும் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து தர்கா தரப்பு கூறியதாவது;

கோவிலின் நிலைப்பாடு, தங்களை தவிற வேறு யாரும் தீபம் ஏற்றக்கூடாது என்பதே.. அது ஒப்பந்தத்திலும் கூறப்பட்டுள்ளது. மலை மீதுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் தர்காவின் வழக்கமான நடவடிக்கைகள் உள்ளன. தர்காவின் கந்தூரி விழாக்கள் எங்களின் எல்லைக்குள்தான் நடக்கிறது. அதைத்தாண்டி நாங்கள் செல்லவில்லை. திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூண் இல்லை. கடந்த காலங்கள் கல்தூணில் தீபத்தூண் ஏற்ற முயற்சி நடந்தபோது ஆட்சியர் அதனை தடுத்துள்ளார். சிறுபாண்மை சமுதாயத்தினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பயன்படுத்துவதில் பல்வேறு இடையூறுகள் இருக்கிறது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தற்போதுள்ள வழக்கு குறித்து மட்டும் உங்கள் வாதங்களை எடுத்து வையுங்கள் என தெரிவித்தனர்.

தொடர்ந்து வாதங்களை முன்வைத்த தர்கா தரப்பு, இஸ்லாமியர்கள் ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின்போது நெல்லித்தோப்பு பகுதியில் தொழுது வந்தனர். ஆனால் தனி நீதிபதி உத்தரவு, இதுபடையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களை பாதிக்கும் வகையில் இருக்கிறது. தர்கா நிர்வாகம் தனது உரிமையை நிலைநாட்ட போராட வேண்டியுள்ளது. சிக்கந்தர் தர்கா, இஸ்லாமியர்களுக்கு பாத்தியப்பட்டது. ஆனால் அங்கு கழிப்பறை கட்ட முடியாது, மின்சார வசதி இல்லை, அடிப்படை வசதிகள் எதுவும் செய்துகொடுக்க முடியாது என்கின்றனர்.

எங்களின் அடிப்படை வசதிகளை கேட்கும்போது, உரிமையியல் நீதிமன்றத்தை நாடச்சொல்கிறார்கள். ஆனால் கல்தூணில் தீபம் ஏற்ற போடப்பட்ட மனுவில், தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மத நல்லிணக்கம், அமைதி, சட்டம்-ஒழுங்கு என எதுவுமே கவனிக்கப்படவில்லை. தனி நீதிபதி விசாரணையின்போது எங்கள் கருத்துக்களை முழுமையாக கூற முடியவில்லை.” என்று தர்கா தரப்பு தங்களது ஆதங்கத்தை முன்வைத்தது.

தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் நாளைக்கு(டிச.16) ஒத்திவைத்தனர். நாளைக்குள் அனைத்து வாதங்களையும் முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்