விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள்.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இந்து முன்னணி அமைப்பு சார்பில் திருப்பூர் மாநகரில் 1,008 விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பாளையக்காட்டில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து அன்னதானத்தை தொடங்கிவைத்தார்.
புதிய பஸ் நிலையம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவிலில் வைக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு 10 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை தொடங்கிவைத்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர்கள் செந்தில்குமார், சேவுகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பாதுகாப்பு
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் சிலைக்கு பாதுகாப்பாக நியமிக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) பொங்கலூர், குண்டடம், காங்கயம், ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. நாளை (புதன்கிழமை)அவினாசி, உடுமலை, பல்லடம், செஞ்சேரிமலை ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.
விசர்ஜன ஊர்வலம்
21-ந் தேதி திருப்பூர் புதிய பஸ் நிலையம், மங்கலம் ரோடு செல்லம் நகர் பிரிவு, தாராபுரம் ரோடு வெள்ளியங்காடு வளைவு முன்பு என 3 இடங்களில் இருந்து மாலை விசர்ஜன ஊர்வலம் தொடங்குகிறது. முக்கிய வீதிகள் வழியாக சென்று திருப்பூர் நடராஜா தியேட்டர் ரோடு ஆலங்காட்டில் இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் சிறப்புரையாற்றுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.