தமிழகத்தில் உடலுறுப்பு தானம் வேண்டி 6 ஆயிரத்து 939 பேர் காத்திருப்பு

உடலுறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டு 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

Update: 2024-02-03 08:54 GMT

சென்னை:

சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தனசேகர் (வயது 57) மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று, தனசேகர் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ., தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி துணை முதல்வர் ஜென்னத் சுகுந்தா மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதுகுறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 3 மாதத்தில் 61 பேர் மூளைச்சாவு அடைந்த பிறகு அவரது குடும்பத்தினர் விருப்பத்தின்பேரில் உடலுறுப்பு தானம் பெறப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு 156 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளார்கள். முதல்-அமைச்சர் அறிவிப்புக்கு முன்பாக 117 பேர் என மொத்தம் 178 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளார்கள்.

எனவே, 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டு உடலுறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல, 4 ஆயிரத்து 97 பேர் தங்களுடைய மறைவுக்கு பின்னால் உடலுறுப்பு தானம் செய்வோம் என்று பதிவு செய்துள்ளார்கள். இந்த ஆண்டு இதுவரை 32 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளனர். ஒருபுறம் உடலுறுப்பு தானம் செய்துவரும் நிலையில் உடலுறுப்பு வேண்டி காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. அதன்படி, 6 ஆயிரத்து 939 பேர் உடலுறுப்பு தானம் வேண்டி காத்திருக்கிறார்கள். அதிகபட்சமாக, சிறுநீரகம் வேண்டி 6 ஆயிரத்து 266 பேர் காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு 178 உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டு ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்