கோவில் குளத்தில் தவறி விழுந்த 2½ வயது ஆண் குழந்தை பலி

திருத்தணியில் கோவில் குளத்தில் தவறி விழுந்து 2½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2023-05-03 08:58 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பழைய தர்மராஜா கோவில் சாலை, போண்டா ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு 2½ வயதில் மோனிஷ்குமார் என்ற ஆண்குழந்தை ஒன்று இருந்தது. அதே தெருவைச் சேர்ந்த மதன் என்பவரின் மகன் தினேஷ் (வயது 6). இந்நிலையில் நேற்று மாலை தினேஷ், மோனிஷ்குமார் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் அருகே உள்ள சதாசிவ லிங்கேஸ்வர கோவில் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோனிஷ்குமார் நிலைதடுமாறி குளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த தினேஷ் குழந்தையை காப்பாற்ற குளத்திற்குள் குதித்தான்.

இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கியதை பார்த்த பொதுமக்கள் விரைந்து சென்று அவர்களை மீட்க போராடினர். இந்தநிலையில் தினேசை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆழமான பகுதிக்குள் மோனிஷ்குமார் சென்றதால் அவனை மீட்க முடியாமல் தடுமாறினர். இதுகுறித்து அறிந்த திருத்தணி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்க போராடினர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் குழந்தை மோனிஷ்குமாரை மீட்டனர். ஆனால் நீரில் மூழ்கியதில் மூச்சுத்திணறி குழந்தை மோனிஷ்குமார் இறந்தது.

இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 2½ வயது குழந்தை குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்