கோழி தீவன எந்திரத்தில் சிக்கி 6 வயது சிறுமி பலி

மோகனூர் அருகே கோழி தீவன எந்திரத்தில் சிக்கி வடமாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2022-11-24 18:45 GMT

மோகனூர்

கோழிப்பண்ணை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் ஏராளமான கோழிப்பண்ணைகள் இயங்கி வருகின்றன. இந்த கோழிப்பண்ணைகளில் வடமாநில தொழிலாளர்கள் ஏாரளமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் மோகனூரை அடுத்த தோளுரில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

அந்த கோழிப்பண்ணையில் பீகாரை சேர்ந்த தர்விர்தர்மாஜீ என்பவர் வேலை செய்து வருகிறார். இவரது மகள் நிவாகுமாரி (வயது 6). இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் தர்விர்தர்மாஜீ கோழிகளுக்கு தீவனம் போடும் எந்திரத்தை இயக்கி கொண்டிருந்தார். அங்கு அவரது மகள் நிவாகுமாரி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சாவு

அப்போது எதிர்பாராத விதமாக நிவாகுமாரி கோழி தீவன எந்திர பெல்டில் சிக்கி படுகாயம் அடைந்தாள். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தர்விர்தர்மாஜீ மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நிவாகுமாரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவளது தந்தை தர்விர்தர்மாஜீ மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோகனூர் அருகே கோழிப்பண்ணை தீவன எந்திர பெல்டில் சிக்கி வடமாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்