வீட்டுமுன்பு நிறுத்தியிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

நெய்வேலியில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் தந்தை-மகன் காயமடைந்தனர்.

Update: 2022-08-27 17:00 GMT

நெய்வேலி, 

நெய்வேலி வட்டம் 22 என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம் (வயது 52). நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் சுரங்கம் 1-ல் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது காரை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை அந்த காரில் திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது.

இதைப்பார்த்த செல்வம் தனது மகன் ஸ்ரீநிவாசுடன் சேர்ந்து அதனை சரிசெய்ய முயன்றார். அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அவா்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த தீ விபத்து குறித்த தகவலின் பேரில் நெய்வேலி மத்திய தொழிலக பாதுகாப்பு படை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் தீ வீட்டுக்கு பரவாமல் தடுக்கப்பட்டதால் ெபரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து நெய்வேலி தெர்மல் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தீ விபத்தில் காயமடைந்த தந்தை, மகன் 2 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்