சோழிங்கநல்லூரில் வங்கியில் 54 பவுன் நகைகளை திருடிய துப்புரவு பெண் ஊழியர் கைது

சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 54 பவுன் தங்க நகைகளை நூதன முறையில் திருடிய துப்புரவு பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-10 05:43 GMT

சோழிங்கநல்லூர் பழைய மாமல்லபுரம் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது வாடிக்கையாளர்கள் அடகு வைத்து சென்ற தங்க நகைகள் குறைந்து காணப்பட்டது. பின்னர் வங்கியில் அடகு வைத்த அனைவரின் தங்க நகைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில் 24 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் சிறுது சிறிது நகைகள் மாயமாகி இருப்பது தெரிந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை அடகு வைக்கும்போது அதனை பரிசோதித்து பின்னர் அதற்குரிய கவரில் தங்கநகைகளை வைத்து சீல் செய்து லாக்கரில் வைப்பது வழக்கம் என தெரிவித்தனர்.

வங்கியில் துப்புரவு பணி செய்து வந்த லூர்து மேரி (வயது 39) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், 'வங்கியில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக துப்புரவுபணி செய்து வரும் லூர்து மேரி, வங்கி ஊழியர்கள் யார் என்ன வேலை சொன்னாலும், உதவி கேட்டாலும் உடனடியாக செய்து வந்ததால் அவர் மீது வங்கி மேலாளர், ஊழியர்கள் என அனைவரும் சந்தேகப்படாமல் நம்பிக்கை வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனால் லூர்து மேரி, வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் தங்க நகைகளை சரிபார்த்து அதை கவரில் போடும் பணியை செய்து வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர் நகையை கவரில் போடும்போது பல நகைகள் இருக்கும் நிலையில் அதில் ஒரு நகையை மட்டும் திருடி சென்றது தெரிய வந்தது. இவ்வாறு கடந்த 4 மாதங்களாக சுமார் 54 பவுன் தங்க நகைகளை அவர் திருடியுள்ளார்.

திருடிய நகைகளை அடகு கடை, தனியார் நகை கடன் நிறுவனத்தில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து அடகு வைத்த 54 பவுன் தங்க நகைகளை தனிப்படையினர் மீட்டனர். பின்னர் லூர்துமேரியை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்