80 கிலோ எடைகொண்ட ராட்சத பச்சை கடல் ஆமை இறந்து கரை ஒதுங்கியது

தூத்துக்குடி கடற்கரையில் 80 கிலோ எடைகொண்ட ராட்சத பச்சை கடல் ஆமை இறந்து கரை ஒதுங்கியது.

Update: 2022-11-24 18:45 GMT

தூத்துக்குடியில் பாதுகாக்கப்பட்ட உயிரினமான 80 கிலோ எடைகொண்ட ராட்சத பச்சை கடல் ஆமை செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பச்சை ஆமை

தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பல அரிய வகை உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்த உயிரினங்களை வேட்டையாடுவதை தடுப்பதற்காக மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அவ்வப்போது மீனவர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிக அளவில் காணப்படக்கூடிய ஒரு அரியவகை உயிரினமான பச்சை ஆமை தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

மீட்பு

அதன்பேரில் தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரகர் ஜினோ பிளஸ்ஸில் தலைமையில், முள்ளக்காடு உதவி கால்நடை மருத்துவர் ஜான் தாமஸ், வனவர் மதன்குமார், வனக்காப்பாளர் பாலாஜி மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சம்பவ இடத்துக்கு சென்றுனர். அங்கு இறந்து கிடந்த பச்சை கடல் ஆமையை மீட்டனர். அந்த ஆமை சுமார் 80 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இது ஆண் ஆமை ஆகும். இந்த ஆமையின் உடலில் எந்தவித காயங்களும் இல்லை. இதனால் முதிர்ச்சி காரணமாக இந்த ஆமை இறந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இருந்தபோதிலும் ஆமையின் சாவுக்கான காரணம் குறித்து அந்ததுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாக்கப்பட்ட உயிரினம்

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே ஆமையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் புதைக்கப்பட்டது. இதே போன்று அந்த பகுதியில் ஒரு சிறிய ஆமையும் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, பச்சை ஆமை பாதுகாக்கப்பட்ட உயிரினம் ஆகும். இந்த ஆமையை வேட்டையாடினால் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்