வீட்டை சேதப்படுத்திய காட்டுயானை கூட்டம்
வால்பாறை அருகே வீட்டை காட்டுயானை கூட்டம் சேதப்படுத்தியது. அங்கிருந்த தொழிலாளி குடும்பத்தினர் கைக்குழந்தையுடன் வெளியேறி தப்பித்தனர்.;
வால்பாறை
வால்பாறை அருகே வீட்டை காட்டுயானை கூட்டம் சேதப்படுத்தியது. அங்கிருந்த தொழிலாளி குடும்பத்தினர் கைக்குழந்தையுடன் வெளியேறி தப்பித்தனர்.
காட்டுயானை கூட்டம்
வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு 13 யானைகள் கொண்ட கூட்டம் நுழைந்தது. தொடர்ந்து தொழிலாளி பிரபாகரன் என்பவரது வீட்டு ஜன்னலை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு உணவு பொருட்களை எடுக்க முயற்சித்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் தனது மனைவி, மகள் மற்றும் கைக்குழந்தையான பேரக்குழந்தையுடன் சமையலறையில் பதுங்கி கொண்டார். அவர்களது கூச்சலை கேட்ட பக்கத்து வீட்டு தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
உயிர் தப்பினர்
இதற்கிடையில் அங்குள்ள குடிநீர் வழங்கும் அறையின் கதவு மற்றும் சுவரை காட்டுயானைகள் உடைத்தன. அவை மீண்டும் வீட்டை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பின்பக்க கதவு வழியாக வெளியேறி அருகில் உள்ள மற்றொரு தொழிலாளியின் வீட்டுக்குள் ஓடி உயிர் தப்பினர். தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்ட காட்டுயானைகளை வனத்துறையினரும், தொழிலாளர்களும் இணைந்து விரட்டினர்.