தலையில் குழவிக்கல்லை போட்டு தொழிலாளி கொலை; மகன் கைது

தலையில் குழவிக்கல்லை போட்டு தொழிலாளியை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-03 19:41 GMT

உப்பிலியபுரம்:

கூலி தொழிலாளி

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வடக்கு விஸ்வாம்பாள்சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி(வயது 48). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுஜாதா(40). இவர்களுக்கு சுரேந்தர்(23) என்ற மகனும், வரலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

சுரேந்தர் மெக்கானிக்கல் பட்டய படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடி வந்தார். வரலட்சுமிக்கு திருமணமாகி அதே பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். புகழேந்திக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அடிக்கடி அவர் குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

தகராறு

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் புகழேந்தி கூலி வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவருக்கும், சுஜாதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை சுரேந்தர் சமரசம் செய்ய முயன்றார். அப்போது சுரேந்தருக்கும், புகழேந்திக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதையடுத்து சுரேந்தர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

இதைத்தொடர்ந்து இரவில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் சுஜாதாவை புகழேந்தி தாக்கியுள்ளார். பின்னர் அவர் வீட்டின் முன்புறம் போடப்பட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் சுரேந்தர் வீடு திரும்பினார். அப்போது சுஜாதா அழுது கொண்டிருந்ததை கண்டு, அது பற்றி அவரிடம் கேட்டபோது, அவரை புகழேந்தி தாக்கியது தெரியவந்தது.

கொலை

இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர், கட்டிலில் தூங்கிய புகழேந்தியை கம்பு மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கினார். சுஜாதா அவரை தடுக்க முயன்றார். ஆனால் தடுக்க முடியவில்லை. இதனால் அருகில் வசிக்கும் மகளையும், மருமகனையும் உதவிக்கு அழைக்க சுஜாதா சென்றுள்ளார். இந்நிலையில் சுரேந்தர் அருகில் இருந்த குழவிக்கல்லை எடுத்து புகழேந்தியின் தலையில் போட்டதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் புகழேந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் புகழேந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்