மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.;
ஆடிப்பெருக்கு விழா
ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றங்கரையின் இருபுறமும் டெல்டா மாவட்ட மக்கள் மங்கல பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வார்கள். பூ, பழம், மஞ்சள், கருகமணி உள்ளிட்ட மங்கல பொருட்களை படையல் வைத்து, தங்களை காக்கும் தாயாக போற்றி காவிரி ஆற்றை வழிபடுவது வழக்கம். அதோடு ஆடி மாதத்தில் பிரிந்திருக்கும் புதுமண ஜோடிகள், காவிரி கரைக்கு வந்து தாங்கள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலையை ஆற்றில் விட்டு, காவிரி அன்னையை வேண்டி கொள்வார்கள்.
மேலும் பெண்கள் தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வமும் கிடைக்க வேண்டும் என்று காவிரித்தாயை பிரார்த்தித்து, தங்களது தாலியை பிரித்து புதுத்தாலியை கட்டுவர். இளைய பெண்களுக்கும் மஞ்சள் கயிற்றை கட்டிவிடுவர்.
துலா கட்டம்
இத்தகைய பாரம்பரிய விழாவான ஆடிப்பெருக்கை மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதனால் துலா கட்டத்தில் அதிகாலை முதலே பெண்கள் கூட்டம் அலைமோதியது. புதுமணத் தம்பதிகள் கருகமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும் காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி நீராடினர்.
மேலும் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளின் போது அணிந்து இருந்த மலர் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர். மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.