ஏ.சி., மின் விசிறி, எல்.இ.டி. மின்விளக்கு வசதியுடன் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா செடி வளர்த்த 4 வாலிபர்கள் கைது

வாடகைக்கு வீடு எடுத்து ஏ.சி., மின் விசிறி, எல்.இ.டி. மின்விளக்கு வசதியுடன் கஞ்சா செடி வளர்த்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-04 05:51 GMT

சென்னை முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சபிபுல்லா தலைமையில் போலீசார் பிராட்வே பிரகாசம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 30) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், இதற்காக தனது நண்பர்களுடன் சேர்ந்து சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா செடி வளர்ப்பதும் தெரியவந்தது.

போலீசார் மாடப்பாக்கம் பகுதியில் உள்ள அந்த வீட்டை சோதனை செய்தனர். அதில் அந்த வீட்டின் உள்ளே 4 அடி உயரத்தில் சுமார் 10 உயர்ரக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கஞ்சா செடிகளை வளர்ப்பதற்காக எல்.இ.டி. விளக்கு அமைத்து, குளு குளு ஏ.சி., மின்விசிறி வசதியும் செய்து உள்ளனர்.

சூரிய ஒளி படாமல் கஞ்சா செடியை வளர்ப்பதற்காக இதுபோல் தனி பிரத்யேக வசதியுடன் ஆய்வகம் போல அமைத்து உள்ளனர். இந்த செடிகளில் உள்ள இலையை பொட்டலம் போல் மடித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக சக்திவேல் மற்றும் அவர் கொடுத்த தகவலின்பேரில் அவருடைய நண்பர்களான கொண்டிதோப்பைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (22), புளியந்தோப்பு பட்டாளத்தை சேர்ந்த நரேந்திரகுமார் (22) மற்றும் சியாம் சுந்தர் (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா, வீட்டில் வளர்த்த கஞ்சா செடிகள், ஏ.சி., கார் மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்