சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு விபத்தில்லா சாலைகளை உருவாக்க வேண்டும் - அமைச்சர் எ.வ.வேலு

சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு விபத்தில்லா சாலைகளை உருவாக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-12-27 21:57 GMT

ஆய்வு கூட்டம்

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சாலைப்பணிகள், பாலப்பணிகள், சாலை விரிவாக்க பணிகள் குறித்து சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில் பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-

தற்போதைய தொழில்நுட்ப புரட்சிக்கு ஏற்ப நெடுஞ்சாலைத்துறை செயல்பட வேண்டும். சாலைப்பணி, பாலம் கட்டும் பணி போன்றவற்றில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வகையில் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

ரூ.18 ஆயிரம் கோடி நிதி

தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது, குறைவான செலவில் தரமான சாலைகளை, பாலங்களை எப்படி அமைக்கலாம் என்பது குறித்தும் யோசிக்க வேண்டும். கட்டுமானங்களின் போது இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படவேண்டும். இயற்கை வளங்களை அதிகமாக பயன்படுத்த தேவையில்லாத தொழில் நுட்பங்களையும் மறுசுழற்சி போன்ற புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்.

கட்டுமான பணிகள் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு பராமரிப்பும் முக்கியம். 2022-23-ம் ஆண்டில் மொத்த மூலதன ஒதுக்கீடு ரூ.46 ஆயிரத்து 399 கோடி. இதில் நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்கிய தொகை ரூ.18 ஆயிரத்து 219 கோடி. இந்த நிதியை முழுமையாக பயன்படுத்த அனைத்து அலுவலர்களும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.

விரைந்து முடிக்க வேண்டும்

நடப்பு ஆண்டு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியான ரூ.6 ஆயிரத்து 728 கோடியை முழுவதுமாக பயன்படுத்தி பணிகளை, விரைவாகவும், தரமாகவும் செய்து செய்து முடிக்க வேண்டும்.

சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்ட, வட்ட தலைமையகங்களின் இணைப்பு சாலைகள் இருவழி, 4 வழிச்சாலைகளாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் மூலம் 45 நகரங்களில் நடைபெற்று வரும் புறவழிச்சாலை, 8 சாலை மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

சாலை பாதுகாப்பு

விபத்தில்லா சாலைகளை அமைக்க சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு பணிகளை திட்டமிட வேண்டும் வேகத்தடைகள் அமைக்கும்போது உரிய வழிகாட்டுதல் படி அமைக்க வேண்டும். முன்னெச்சரிக்கை வழிகாட்டு பலகைகள் தரமானதாக அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் உயர் அதிகாரிகள்பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்