காலை, மாலை நேரங்களில் கூடுதல் அரசு பஸ்கள்

கூடலூரில் இருந்து பாட்டவயல் வழியாக அய்யன்கொல்லிக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-03-03 18:45 GMT

பந்தலூர்

கூடலூரில் இருந்து பாட்டவயல் வழியாக அய்யன்கொல்லிக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

படிக்கட்டுகளில் பயணம்

கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் இருந்து பந்தலூர், பிதிர்காடு, பாட்டவயல் வழியாக அய்யன்கொல்லிக்கு தினமும் 2 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களையே பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நம்பி உள்ளனர். கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பந்தலூரில் இருந்து பாட்டவயல் வழியாக அய்யன்கொல்லி நோக்கி சென்ற அரசு பஸ்சில் நிற்க கூட இடம் இன்றி மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்லும் நிலை உருவானது. இதனால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

கூடுதல் பஸ்கள்

இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் போதிய வசதி இல்லை. இதனால் தினமும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும்போது, பஸ்சில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் படிகட்டுகளில் தொங்கி செல்லும்போது, கீழே தவறி விழுந்து காயம் அடைகிறோம்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் அதை பரிசீலிக்க கூட முன்வரவில்லை. இதனால் எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் விட இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்