சிறுவர் இல்லங்களில் கூடுதல் மனநல ஆலோசகர்களை பணியமர்த்த வேண்டும்
சிறுவர் இல்லங்களில் கூடுதல் மனநல ஆலோசகர்களை பணியமர்த்த வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வலியுறுத்தி உள்ளார்.;
சிறுவர் இல்லங்களில் கூடுதல் மனநல ஆலோசகர்களை பணியமர்த்த வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வலியுறுத்தி உள்ளார்.
அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஆய்வு
ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு, மீண்டும் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நேரில் சென்று குழந்தைகள் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சிறுவர்கள் தங்கி உள்ள அறைகள், கல்வி பயிலும் அறைகள், உணவு சாப்பிடும் இடம், உணவு தயாரிக்கும் சமையற் கூடம் மற்றும் வளாகத்தினை பார்வையிட்டார்.
பின்னர் ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த இல்லத்தில் இருந்து 4 சிறுவர்கள் தப்பிச்சென்றதை தொடர்ந்து உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மீண்டும் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதற்கு சிறுவர்களின் மன அழுத்தம் முக்கிய காரணமாக உள்ளது.
இதுபோன்ற நிகழ்வு திருநெல்வேலி, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் குறுகிய காலத்தில் நடைபெற்று உள்ளது. பாதுகாப்பு மையத்தை மீறி வெளியில் தப்பி செல்கின்றனர். இதற்கு என்ன காரணம்?, சிறுவர்கள் இருப்பதற்கு இந்த மையங்கள் ஏற்புடையதாக இருக்கின்றதா? இல்லையா? சிறுவர்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? என ஆய்வு செய்ய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கேமராக்கள் பொருத்தம்
ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இன்று (நேற்று) ஆய்வு செய்தோம். இந்த இல்லம் நல்ல சூழ்நிலையோடும், காற்றோட்ட வசதியோடும் சுகாதாரமாகவும், அனைத்து வசதிகளும் நிறைந்து உள்ளது.
குழந்தைகள் தப்பிச்சென்ற பின்பு மாவட்ட நிர்வாகம் சிறுவர்கள் இல்லத்தினை சுற்றி 5 நவீன கேமராக்களை பொருத்தி உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் ஓரங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி கண்காணிப்பில் இருக்கும் படியாக ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
சிறுவர்களின் மன அழுத்தத்தை போக்கும் பயிற்றுநர்கள் 3 பேர் உள்ளனர். மேலும் கூடுதல் நடவடிக்கையாக சிறுவர்களின் மனநலத்தை சீரமைக்க யோகா பயிற்சி, விளையாட்டு மற்றும் அவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் பயிற்சிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 2 மாதங்களாக நடைபெற்ற இந்த நிகழ்வுகள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் 2 பக்க அறிக்கை தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மனநல ஆலோசகர்கள்
குழந்தைகள் இல்லம், கூர்நோக்கு இல்லங்கள், நல்வழிப்படுத்தும் இல்லங்களாக மாற்றிட குழந்தைகளின் மனநிலை மாற வேண்டும். உளவியல் ரீதியாக அவர்களின் மனநிலை மாற்றிட கூடுதல் உளவியல் ஆலோசர்களையும், கூடுதல் மனநல ஆலோசகர்களையும் பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் வளர்மதி, போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, அரசினர் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் கண்ணன் ராதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, குழந்தைகள் நல குழும தலைவர் வேதநாயகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.