காதலியுடன் தகராறு: வாலிபர் எடுத்த விபரீத முடிவு
இருவரும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் தினேஷ் (19 வயது). இவர் கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். திருவண்ணாமலை காந்தி நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார்.
இவருக்கும் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தினேசும், அந்த இளம்பெண்ணும் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த தினேஷ் தான் தங்கியிருந்த வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சென்று தினேசின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் பிரச்சினையில்தான் தினேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.