அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இணைந்து செயல்பட வேண்டும்
அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இணைந்து செயல்பட வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.;
அரசியல் லாபம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வேலூர் வந்திருந்தார். இங்கு நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தமிழக மக்களின் நலன் கருதி இணைந்து செயல்பட வேண்டும். கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே நிர்வாகிகள் கட்சி மாறுவது சகஜம் தான். இதற்காக விமர்சனங்களை வைக்கக்கூடாது. ஆட்சியை கலைக்க சதி நடப்பதாக தமிழக முதல்- அமைச்சர் கூறுவது அரசியல் லாபத்திற்காகவும், எதிர்கால வாக்குகளுக்காகவும் தான்.
வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினையை தமிழக அரசின் உளவுத்துறை முன் கூட்டியே அறிந்து அதனை தடுத்திருக்க வேண்டும். அவர்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறுவதை தடுத்திருந்தால் பிரச்சினை இவ்வளவு பெரிதாக வளர்த்திருக்காது.
வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசுவது ஏற்கத்தக்கது அல்ல. பதற்றத்தை தமிழக அரசு உடனடியாக தணித்திருக்க வேண்டும்.
இணைந்து செயல்படும் சூழல்
வருங்காலத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து அரசு கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் அவர்களின் பங்கு யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் முக்கியமானதாக உள்ளது. தமிழக தொழிலாளர்களுடன் இணைந்து செயல்படும் சூழல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அது தொடர வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கபட வேண்டியது தமிழக அரசு. ஆனால் தற்போது அது சரியாக இல்லை என்பதை செய்தித்தாள்கள் மூலம் பார்க்கிறேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தை சட்டத்தின் மூலம் மனிதநேயத்துடன் அதனை தடுக்க புதிய சட்டங்களை கொண்டு வரவேண்டும். கச்சா எண்ணை கசிவுக்கு சரியான தீர்வை ஏற்படுத்த வேண்டும்.பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். தவறு செய்தவர் யார் என்பது தெரியவந்தால் உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு காலதாமப்படுத்தாமல் நடவடிக்கை வேண்டும். வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை விரைந்து முடிக்க வேண்டும்.
ஈரோடு இடைத்தேர்தல் என்பது மோசமானது. மக்களை பட்டியில் அடைத்து வைத்து தேர்தலை நடத்தியதை போல் வேறு எங்கும் இல்லை. அப்படி இருந்தும் அ.தி.மு.க. 44 ஆயிரம் ஓட்டுகளை பெற்றது என்பது பெரிய விஷயம் தான். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. அதிக இடங்களை பெற்று ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை உள்ளது. அதை தான் 3 மாநில தேர்தல்கள் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாவட்ட தலைவர் ஆர்.ஜே.மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.