நெல்லையில் ஒரே நாளில் 5.2 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.;
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி போலீஸ் துணை கமிஷனர்கள் தலைமையில் மாநகரில் போதைப்பொருளான கஞ்சா நடமாட்டத்திற்கு எதிராக பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜனகன் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேட்டை சேரன்மகாதேவி ரோடு, சத்யாநகர் விலக்கு அருகில் பைக்கில் வந்த திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர், அம்மன்கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் மகாராஜா என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயன்றபோது, பைக்கை நிறுத்தாமதல் தப்பி சென்றவரை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
அதில் அவர் விற்பனைக்கு அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 4 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. எனவே மேற்சொன்ன கஞ்சா மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மகாராஜாவை கைது செய்து போரீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இதேபோல் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திருப்பணிகரிசல்குளம், முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் இசக்கிமுத்து(எ) கருப்பா(28) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் என 2 பேரை போலீசார் விசாரித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் விற்பனைக்கு அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் ஒரு 1 கிலோ 200 கிராம் சுஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்சொன்ன 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகர காவல்துறையின் கஞ்சாவிற்கு எதிரான தீவிர நடவடிக்கையால் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 5 கிலோ 200 கிராம் எடையுடைய கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்ற சட்ட விரோத செயலிகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.