கூட்டணியா.. தனித்து போட்டியா..? - என்ன சொல்லப் போகிறார் விஜய்..? - இன்று த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம்
ஜனநாயகன் பட விவகாரம், சி.பி.ஐ. விசாரணை என்று தன்னை சுற்றிய விஷயங்களில் விஜய் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. ஆளும் கட்சிக்கு முன்னரே முந்தி கொண்ட பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பிரசார தேரை ஓட்ட தொடங்கி விட்டார்.
அதே சமயத்தில், மகளிருக்காக செயல்படுத்திய திட்டங்கள் உள்பட தாங்கள் கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால், ஆளும் கட்சியான தி.மு.க. நிச்சயம் வருகிற தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது. இருந்தாலும், ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அதேசமயம் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க.வும் தீவிரமாக இறங்கியுள்ளது. நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் புதிதாக களம் காண இருக்கிறது. நடிகர் விஜய் நடத்தி வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆளுங்கட்சியான தி.மு.க.வும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யோ, சாத்தியமான திட்டங்களை மட்டுமே மக்களுக்காக நிறைவேற்றுவோம் என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தேர்தல் பிரசார குழு கூட்டங்கள் நடந்தன. அதேநேரத்தில், கடந்த டிசம்பர் 18-ந்தேதி ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்புக்கு பிறகு விஜய் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. ஜனநாயகன் பட விவகாரம், சி.பி.ஐ. விசாரணை என்று தன்னை சுற்றிய விஷயங்களில் விஜய் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.
இந்தநிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) த.வெ.க. தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் த..வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இக்கூட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர்.
கூட்டத்தில் பங்கேற்போர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும். டிஜிட்டல் அடையாள அட்டையில் உள்ள கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்த பிறகே கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவர். கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தீவிரமாக செய்து வருகிறார்.
முன்னதாக இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள பதிவில், “25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “த.வெ.க. சார்பில் 26-ந்தேதி சென்னையில் இருந்து எங்கள் பிரசார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். 234 தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளுடன் பணிகளை மேற்கொள்வோம். ஒவ்வொரு இடத்திலும் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்க இருக்கிறோம். கூட்டணியா?.. தனித்து போட்டியா? என்பது குறித்து விஜய் அறிவிப்பார்” என்று தெரிவித்திருந்தார்.
234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு வியூகங்கள் அமைத்து தமிழக வெற்றிக்கழக தேர்தல் பணிகள் நடை பெற்று வரும்நிலையில், விசில் சின்னம் கிடைத்திருப்பது த.வெ.க.வினருக்கு கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது.