பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த நெல் வயலில் வரப்பு பயிர் சாகுபடி செய்யலாம்-விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுறுத்தல்

Update: 2023-01-24 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த நெல் வயல்களில் வரப்பு பயிர் சாகுபடி செய்யலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வரப்பு பயிர் சாகுபடி

நெல் வயல்களில் ஒருமித்த பூச்சி நோய் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக வரப்பு பயிர்களை சாகுபடி செய்யலாம். வரப்பு பயிராக நெல் வயல்களின் வரப்புகளில் உளுந்து பயிர்களை சாகுபடி செய்வதனால், உகந்த சுற்றுச்சூழல் உருவாகப்பட்டு, இயற்கை எதிர் பூச்சிகள் பெருகிறது. இதனால் ஒரு சமநிலையை பேணுவதன் மூலம் நெல் வயல்களில் பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

மேலும் வரப்பு பயிர் சாகுபடி செய்வதனால் வரப்புகளில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. வயல்களில் சாகுபடி செய்யாத காலங்களில் வரப்பில் உள்ள களைகள் பூச்சிகளுக்கு மாற்று வாழ்விடமாக அமைகிறது. வரப்பு பயிர் சாகுபடி செய்வதன் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்பட்டு, பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி பாதிக்கப்பட்டு, அவை தடுக்கப்படுகிறது.

மானிய விலையில் உளுந்து

மேலும் வரப்பு பயிர்களால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதன் மூலம், அவர்களின் பொருளாதாரம் மேம்படும். மாநில மேலாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் வரப்பு பயிராக சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு 1 கிலோ 200 கிராம் உளுந்து விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆகவே பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் அருகில் உள்ள வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம், நெல் வயல்களில் உளுந்து வரப்பு பயிர் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்