கடலூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைப்பதை கண்டித்து கடலூரில் அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-20 16:52 GMT

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, சுற்றுவேலி அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கடலூர் புதிய பஸ் நிலையத்தை எம்.புதூரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை கண்டித்து கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்திருந்தார்.

அதன்படி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். கடலூர் மாநகர பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், கந்தன், வினோத், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார் வரவேற்றார்.

தி.மு.க. கூட்டணி கட்சிகள்....

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், கடலூர் மாநகர மக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவரும் கலெக்டர் அலுவலகம் அருகிலேயே புதிய பஸ் நிலையம் அமைப்பதையே விரும்புகின்றனர். மேலும் தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் அதனையே வலியுறுத்தியுள்ளன.

எம்.புதூருக்கு புதிய பஸ் நிலையம் சென்றால் கடலூரின் வளர்ச்சி மேலும் 25 ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்லும். இந்த இடம் இரவில் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதோடு, பொதுமக்களுக்கு பணமும், நேரமும் விரயமாகும். எனவே புதிய பஸ் நிலையத்தை எம்.புதூரில் அமைக்க முயற்சித்தால் அ.தி.மு.க. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.

வழக்கு

இதற்கிடையே சட்ட விரோதமாக ஒன்று கூடி, போலீசார் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட அவை தலைவர் சேவல்குமார் உள்பட 1500 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்