மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.;

Update:2023-03-07 00:30 IST

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 220 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

அதனை தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு விபத்து மரணத்துக்கான இழப்பீடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் மூலம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் மாநில அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்கள் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்தர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்