அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு - சென்னை சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு
அரசு இடத்தை அபகரித்ததாக கூறி அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சென்னை சிறப்பு கோர்ட்டு நாளை (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறுகிறது.
அமைச்சர் பொன்முடி மீது புகார்
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதாக கடந்த 2003-ம் ஆண்டு புகார் எழுந்தது.
அதாவது பொன்முடி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்த இடத்தில் சட்டவிரோதமாக குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு போலி ஆவணங்களை தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடத்தை பதிவு செய்து ரூ.35 லட்சம் மதிப்பில் அங்கு கட்டிடம் கட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
10 பேர் மீது வழக்கு
இதுதொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது 27.8.2003 அன்று வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையை முடித்து 2.9.2004 அன்று பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தநிலையில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து 26.4.2007 அன்று உத்தரவிட்டது.
சிறப்பு கோர்ட்டில் விசாரணை
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. விசாரணை முடிவில், பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு 6.9.2017 அன்று ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் மரணம் அடைந்தனர்.
நாளை தீர்ப்பு
இதைத்தொடர்ந்து பொன்முடி உள்ளிட்ட மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜரத்தினம் உள்பட 90-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 180-க்கும் மேற்பட்ட சான்றாவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி ஜெயவேல் அறிவித்துள்ளார்.