பழமையான பிரம்மா, சண்டிகேஸ்வரர் சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் ரெயில்வே குடியிருப்பில் பழமையான பிரம்மா, சண்டிகேஸ்வரர் சிற்பங்கள் கண்டெடுப்பு

Update: 2023-04-17 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் ரெயில் நிலையம் அருகே உள்ள வடக்கு ரெயில்வே குடியிருப்பில் ஆங்கிலேயர் காலத்து கட்டிடங்கள் தற்போது இடிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரலாற்று ஆர்வலர் கோ.செங்குட்டுவன், யாதும் ஊரே யாவரும் கேளிர் அமைப்பினர் நாராயணன், சித்தார்த்தன் ஆகியோர் களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பல்லவர் காலத்தை சேர்ந்த பிரம்மா, முற்கால சோழர் காலத்தை சேர்ந்த சண்டிகேஸ்வரர் சிற்பங்கள் ஒரே இடத்தில் எதிரெதிரே இருப்பது கண்டறியப்பட்டது.

இதுபற்றி வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் கூறும்போது, இங்கு நடத்திய களஆய்வின்போது பல்லவர் காலத்து 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரம்மா, சண்டிகேஸ்வரர் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தன. பிரம்மா சிற்பம் நின்ற நிலையில் காட்சி தருகிறார். நேராக பெரிய அளவிலும் இடது மற்றும் வலது புறங்களில் மிகச்சிறிய அளவிலும் என 3 முகங்கள் அழகாக காட்டப்பட்டுள்ளன. 4 கரங்களுடனும் இருக்கும் இவர் உபவீதம், பூணூல் அணிந்திருக்கிறார். இவை வலதுகரத்தின் மீதாக பின்புறம் செல்வதால் இந்த சிற்பம் பல்லவர் கால(கி.பி.8-ம் நூற்றாண்டு) சிற்பமாகும். அதுபோல் சண்டிகேஸ்வரர் சிற்பம், வலதுகரத்தில் மழு ஏந்தி இருக்கும் இவர் இடது கரத்தை தொடை மீது வைத்திருக்கிறார். செவிகளில் கர்ண குண்டலங்கள் அழகு செய்கின்றன. கழுத்து, கைகள் மற்றும் கால்களில் அணிகலன்கள் அணிசெய்கின்றன. தடித்த முப்புரி நூலும் வயிற்றுப்பகுதியில் உதர பந்தம் எனும் அணிகலனையும் அணிந்திருக்கிறார். வலது காலை தொங்கவிட்டும், இடதுகாலை மடக்கியும் சுகாசனத்தில் அமர்ந்து காட்சிதருகிறார். இந்த சிற்பம் பிற்கால பல்லவர் அல்லது முற்கால சோழர் காலத்தை (கி.பி.9-ம் நூற்றாண்டு) சேர்ந்தது ஆகும். இச்சிற்பங்களின் காலத்தை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிப்படுத்தி இருக்கிறார். புதர்கள் மண்டிய பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் இந்த சிற்பங்களை பாதுகாக்க ரெயில்வே துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஈடுபட வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்