வைரஸ் பரவல்: அவசரகால மீட்பு குழுவை தமிழகத்துக்கு அனுப்புங்கள் - மத்திய மந்திரிக்கு, அண்ணாமலை கடிதம்

தமிழகத்தில் 'இன்புளூயன்சா' வைரஸ் பாதிப்பு நிலைமையை கண்டறிய அவசரகால மீட்பு குழு ஒன்றை அனுப்புமாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-09-20 02:44 GMT

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'இன்புளூயன்சா' வைரஸ் பரவல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும். குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

'இன்புளூயன்சா' வைரஸ் பாதிப்பினால், மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்படாத வகையில், உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைக்க, மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்திட பா.ஜ.க. சார்பில், அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

'இன்புளூயன்சா' வைரஸ் பரவல் குறையும்வரை பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு டாக்டர்களின் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். நோய் பரவலை தடுப்பதற்கு மக்களும் அரசும் இணைந்து செயல்பட்டு பரஸ்பரம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிற்கு அண்ணாமலை எழுதி உள்ள கடிதத்தில், "தமிழகத்தில் 'இன்புளூயன்சா' வைரஸ் பாதிப்பு நிலைமையை கண்டறிய அவசரகால மீட்பு குழு ஒன்றை அனுப்பி மாநில அரசுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக வழங்க வேண்டும் " என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்