மோசடி வழக்கில் சிக்கியவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு

மோசடி வழக்கில் சிக்கியவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-18 20:56 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் தங்க நகைக்கடன் வழங்கும் தொழிலை செய்து வரும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் சென்னை குரோம்பேட்டையில் உள்ளது. இந்த அலுவலகத்தில் வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் சிலர், வாடிக்கையாளர்களின் விவரங்களை எடுத்துக் கொண்டதுடன் மட்டுமல்லாமல், போன் செய்யும் வாடிக்கையாளர்களை வேறு ஒரு நிறுவனத்துக்கு நகைக்கடன் வாங்க திசைதிருப்பி விட்டுள்ளனர்.

இந்த மோசடி குறித்து குரோம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்படி, விஜய் ஆனந்த், அருள், பிரகாஷ், ராஜேஷ் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், கைதான பிரகாஷ் அளித்த வாக்குமூலத்தின்படி, நீலகண்டன் முத்தையன் என்பவரையும் இந்த வழக்கில் போலீசார் சேர்த்துள்ளனர். இதையடுத்து, முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பிரகாசுடன் முன்பு மனுதாரர் வேலை செய்தார். பிரகாஷ் நகைக்கடன் கொடுக்கும் நிறுவனத்தை புதிதாக தொடங்கியுள்ளதாக கூறி, மனுதாரரை வேலைக்கு அழைத்துள்ளார். அதனால், மனுதாரர் வேலைக்குத்தான் சென்றாரே தவிர, வேறு எந்த குற்றமும் செய்யவில்லை'' என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இதை ஏற்காத நீதிபதி, அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்