மத்திய அரசு பணிக்கு தேர்வான 206 பேருக்கு நியமன ஆணை

தென் மாவட்டங்களில் இருந்து மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 206 பேருக்கு பணி நியமன ஆணையினை மத்திய வேளாண்மை இணை மந்திரி சோபா கரண்ட்லஜே வழங்கினார்.

Update: 2023-08-28 18:45 GMT

சிவகங்கை

தென் மாவட்டங்களில் இருந்து மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 206 பேருக்கு பணி நியமன ஆணையினை மத்திய வேளாண்மை இணை மந்திரி சோபா கரண்ட்லஜே வழங்கினார்.

பணி நியமன ஆணை

தென் மாவட்டங்களில் இருந்து மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் ரோஜ்கர் மேளா சிவகங்கையை அடுத்த இலுப்பக்குடியில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் இணை மந்திரி சோபா கரண்ட்லஜே தலைமை தாங்கினார். இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. விஜயகுமார் டோக்கரா வரவேற்று பேசினார். விழாவில் 206 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி மத்திய இணை மந்திரி பேசியதாவது:-

தற்போது இங்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறைந்த வயது உடையவர்கள். இவர்களுக்கு 40 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் வாய்ப்பு உள்ளது. இவர்களுடைய பணியின் மூலம் இந்தியா உலகிலேயே நம்பர் ஒன் நாடாக மாறும். 2047-ம் ஆண்டு இந்தியாவை அனைத்து துறைகளிலும் நம்பர் 1 நாடாக மாற்ற வேண்டும் என்பதே பிரதமரின் இலக்காக உள்ளது.

45 இடங்கள்

தற்பொழுது மொபைல் ஏற்றுமதியில் உலகிலேயே இந்தியா 2-வது இடத்தை பெற்றுள்ளது. அதுபோல் ஆட்டமா பையில் ஏற்றுமதியில் 3-வது இடத்தை பெற்றுள்ளது. வேளாண்மை துறை பொருட்கள் ஏற்றுமதியில் 8-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் இருப்பதால்தான் நாம் இங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். தற்பொழுது இங்கு பணி நியமனம் பெறுபவர்களில் 99 சதவீதம் பேர் உள்துறை அமைச்சகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நடைபெற்றுள்ள 8 முகாம்களின் மூலம் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் 5-வது இடத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவில் 45 இடங்களில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் சென்னை மற்றும் சிவகங்கை ஆகிய 2 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் முகாமில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டுள்ளார். பிரதமர் மோடி கூறியபடி 2024-க்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற இலக்கை கண்டிப்பாக நாம் அடைந்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

206 பேர்

நிகழ்ச்சியில் சிவகங்கை, தேனி, நெல்லை, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 206 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படைக்கு 65 பேரும், பி.எஸ்.எப். படைக்கு 27 பேரும், சி.ஆர்.பி.எப். படைக்கு 67 பேரும், சி.எஸ்.எப். படைக்கு 20 பேரும் பணிநியமன ஆணை பெற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சருக்கு இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. துளசி மரக்கன்று வழங்கினார்.

விழாவில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், தென் மாநில வேளாண்மை அபிவிருத்தி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை கமாண்டண்ட் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்