தவெக பக்கம் திரும்புகிறதா?, பாமகவின் டாக்டர் ராமதாஸ் தரப்பு
ஆட்சி மாற்றம் வேண்டும் என டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீகாந்தி கூறினார்.;
சேலம்,
பாமகவில் தந்தை - மகனுக்கு இடையே கட்சியை யார் கைப்பற்றுவது என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வந்தாலும் டாக்டர் ராமதாஸ்-அன்புமணிக்கு இடையேயான யுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் இருந்தே டாக்டர் ராமதாஸ் திமுக கூட்டணியையும், அன்புமணி பாஜக கூட்டணியையும் விரும்பினார். கூட்டணி விஷயத்தில் 2 பேரும் இரு துருவங்களாக இருந்ததால், பிரச்சினைக்கு அதுவே முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனால், சேலத்தில் இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் செயல் தலைவரும், டாக்டர் ராமதாசின் மகளுமான ஸ்ரீகாந்தியின் பேச்சு ஏதோ பாமக அணி மாற இருக்கிறதோ என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அவர் பேசும்போது, "அன்புமணி மேடைக்கு மேடை பேசும்போது ஜி.கே.மணியையும், அருள் எம்.எல்.ஏ.வையும் திமுகவின் கைக்கூலி, திமுகவின் அடிமை என்று கூறிவருகிறார். அவர்கள் தான் (அன்புமணி) ஆர்.எஸ்.எஸ்.-ன் அடிமைகள். 2026 தேர்தலில் பாமக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற வேண்டும். ஆட்சி மாற்றம் வேண்டும். 2026 தேர்தல் வியூகத்தை டாக்டர் ராமதாஸ் வகுத்துவிட்டார். யாருடன் கூட்டணி, யாருக்கு சீட் என அவருக்கு தெரியும். 25 எம்.எல்.ஏக்களுடன் சட்டசபைக்கு செல்வோம். ஆட்சியில் பங்கு பெறுவோம்" என்றார்.
ஸ்ரீகாந்தியின் பேச்சை வைத்து பார்க்கும்போது, அன்புமணியை ஆர்.எஸ்.எஸ். அடிமைகள் என்று கூறுவதால், பாஜகவுடன் டாக்டர் ராமதாஸ் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்பது உறுதியாகிறது. அடுத்து, ஆட்சியில் மாற்றம் வேண்டும், அதில் நமக்கு பங்கு வேண்டும் என்கிறார். இதை வைத்துப்பார்த்தால், தேர்தலில் திமுக தோற்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும், ஆட்சியில் பங்கு என்பதை திமுக ஒருபோதும் ஏற்காது. இப்போதைக்கு ஆட்சியில் பங்குதர தயாராக இருப்பது தவெக மட்டுமே. அதுவும் 25 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டசபைக்கு போவோம் என்கிறார். தவெகவை தவிர வேறு எந்தக் கூட்டணியும் டாக்டர் ராமதாஸ் தரப்புக்கு 25 தொகுதிகள் தராது. எல்லாவற்றையும் கூட்டி, கழித்து பார்த்தால் பாமகவின் டாக்டர் ராமதாஸ் தரப்பு, தவெக கூட்டணியில் இணையும் என்றே தெரிகிறது.