வணிகர்களின் தோழனாக, பாதுகாவலனாக திமுக அரசு என்றைக்கும் இருக்கும்: உதயநிதி ஸ்டாலின்

வணிகர்களின் தோழனாக, பாதுகாவலனாக திமுக அரசு என்றைக்கும் இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-29 11:41 IST

சென்னை,

சென்னை, கலைவாணர் அரங்கில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இயங்கி வரும் திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைக்கு திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் முப்பெரும் விழாவில், பங்கேற்று உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். பொதுவாக வணிகர்கள் என்று சொன்னாலே, எல்லோருக்குமே ஒரு முன்னுதாரணம்தான். ஏனெனில், நீங்கள் கடினமாக உழைக்கக்கூடியவர்கள். நீங்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; உங்களுக்கு நீங்கள்தான் ராஜா. ஆனாலும், அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் அன்போடும் பண்போடும் பழகுபவர்கள் நீங்கள்தான்.

உங்களுடைய வேலை நேரத்தை நீங்களே தீர்மானிக்கிறீர்கள், மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது. இருந்தாலும் அஜாக்கிரதையாக இல்லாமல், ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில், உங்களுடைய கடையைத் திறந்து வியாபாரத்தைத் தொடங்குவீர்கள். அதனால்தான் வெற்றிகரமான சங்கமாக 50-வது ஆண்டைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.

வணிகர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதுடன், வாழ்க்கையில் பலருக்குத் தன்னம்பிக்கையையும் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இத்தகைய வணிகர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. திராவிட இயக்கத்தின் தந்தையாக விளங்கும் தந்தை பெரியார் ஈரோட்டில் ஒரு வணிகர் குடும்பத்தில் பிறந்தவர்தான். பேரறிஞர் அண்ணா திமுகவைத் தொடங்கிய பிறகு, இந்த இயக்கம் வளர்ந்ததே கடைகளில்தான்.

தேநீர்க் கடை, மிதிவண்டிக் கடை, சலூன் கடை எனப் பல்வேறு கடைகளில்தான் தி.மு.க வளர்ச்சி அடைந்தது. அக்காலத்தில் கடைகளில் அரசியல் பேசி வளர்ந்த இயக்கம் என்பதால்தான், தி.மு.க மீது வணிகர்களுக்கும், வணிகர்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எப்போதுமே தனிப்பாசம் உண்டு. இந்தப் பாசத்திற்கும் பந்தத்திற்கும் இந்த அரங்கமே ஒரு சிறந்த உதாரணம்.

உள்ளூரில் தொடங்கி உலகம் முழுவதும் உற்பத்தியாகின்ற பொருட்களை எல்லாம் பொதுமக்களுக்குக் கொண்டு வந்து சேர்ப்பவர்கள் வணிகர்களாகிய நீங்கள்தான். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்குவதும் நீங்கள்தான். அப்படிப்பட்ட உங்களுக்கு எல்லா வகையிலும் திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட மாடல் அரசும் என்றைக்கும் துணை நிற்கும்.

ஆனால், இன்றைக்கு மத்திய அரசு என்ன செய்துகொண்டு இருக்கிறது?. மத்தியஅரசு உங்கள் வாழ்க்கையைச் சிரமப்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி-யைக் கொண்டு வந்து வாட்டி வதைக்கிறது. ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசும், நம் முதலமைச்சரும் வணிகர்களின் நலனைப் பேணிக் காக்கின்ற அரசாக, பேணிக் காக்கின்ற முதலமைச்சராகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

வியாபாரிகளின் நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றக்கூடிய வகையில் திராவிட மாடல் அரசு என்றைக்கும் வணிகர்களின் தோழனாக, பாதுகாவலனாக இருக்கும். உங்களுடைய ஆதரவை எப்போதும் போலத் தொடர்ந்து நம் திராவிட மாடல் அரசுக்கும், நம் முதல்-அமைச்சருக்கும் வழங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்