பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறித்து உரிய நடவடிக்கை
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சையில், அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.;
தஞ்சாவூர்:
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சையில், அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தஞ்சை மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். செங்கிப்பட்டி அருகே உள்ள பாலையபட்டியில் சிறப்பு அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மேலவஸ்தாசாவடியில் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தஞ்சையை அடுத்த மருங்குளம் கோபால் நகரில் உள்ள மதர்தெரசா முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அமைச்சரை மதர் தெரசா பவுண்டேசன் தலைவர் சவரிமுத்து வரவேற்றார். தொடர்ந்து தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், மேம்பாலத்தில் உள்ள அன்னை சத்யா பெண்கள் குழந்தைகள் காப்பகம், அரசு கூர் நோக்கு மையம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெண்களுக்கான விடுதி
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சையில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதி தமிழக முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ளது. அது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பெண்கள் பாதுகாப்பிற்கான எண் 181 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர், போலீசாருக்கு வரும் அழைப்புகள், புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுகின்றனர்.
உரிய நடவடிக்கை
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், வன்முறைகள் இருந்தால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் இடங்களில் ஒரு விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான தமிழகமாக இருக்க அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து தரப்பு பெண்கள் கருத்துக்களையும் ஆய்வு செய்து புதிய மகளிர் கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கையை முதல்-அமைச்சர் விரைவில் வெளியிடுவார்.
முதியோர் இல்லம்
குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஈடுபடுத்துவது குறித்து திட்டம் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். முதியோர் இல்லங்களை நடத்துவதற்கு தனியாரும் ஊக்குவிக்கப்படுவார்கள். அரசு சார்பிலும் முதியோர் இல்லம் தொடங்கப்படும்.
தெருவோரங்களில் ஆதரவின்றி வசித்து வருபவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கவும், அரசு சார்பில் இல்லம் அமைக்கப்பட்டு அங்கு தங்க வைத்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் பாதுகாப்பிற்கு என தனி அலகு உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்த ஆய்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன், கடுவெளியில் உள்ள முதியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகத்தை பார்வையிட்டார். பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.