காட்சி பொருளாக காணப்படும் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறந்த உடனே மூடப்பட்டு, காட்சி பொருளாகவே காணப்படுவதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 700 படுக்கை வசதிகள் இருந்தும் என்ன பலன் என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

Update: 2023-04-24 18:57 GMT

அரியலூர் மருத்துவக்கல்லூரி

அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என மாவட்ட மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2020 ஜூலை 7-ந் தேதி அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கின.

இங்கு தரைத்தளம் மற்றும் 2 மாடிகளுடன் கூடிய நிர்வாக அலுவலகம், தரைத்தளம் மற்றும் 6 மாடிகளுடன் கூடிய கல்லூரி, வங்கி, அஞ்சல் நிலையம், மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் கூடிய கட்டிடம், மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தரைத்தளம் மற்றும் 5 மாடிகள் கொண்ட கட்டிடம், பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதனிடையே மருத்துவ கல்லூரிகளுக்கான மத்தியக்குழு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செயல்பாட்டை தொடங்க அனுமதி அளித்தது.

700 படுக்கை வசதிகளுடன்...

அதன்படி இந்த மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி திறந்து வைத்தார். இதையடுத்து அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் மருத்துவ கல்லூரியில் ஆண்டுக்கு 150 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது 2-ம் ஆண்டு சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் புதிய கல்லூரி கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 தளங்களைக் கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக நேரில் வந்து திறந்து வைத்தார். அன்று முதல் வெளி நோயாளிகள் பிரிவு செயல்படும் என அறிவித்திருந்தனர்.

மூடல்

அதன்பேரில் அமைச்சர் திறந்து வைத்தபோது சிலருக்கு சிகிச்சை அளித்தனர். அன்றைய ஒரு மணி நேரத்திற்கு பிறகு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்படவில்லையாம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றவுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பூட்டப்பட்டது.

தற்போது உள்ள பழைய மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல், பிரசவ வார்டுகளிலும் போதிய இடம் இன்றி நோயாளிகள் தடுமாறி வருகின்றனர். அப்படி இருந்தும் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மற்ற புதிய 10 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மட்டும் மூடப்பட்டுள்ளதாக அரியலூர் மாவட்ட நோயாளிகள், மக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-

4 வழி சாலையாக அமைக்க வேண்டும்

வஞ்சினபுரத்தை சேர்ந்த கற்பகவல்லி:- அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன் பகுதி தஞ்சாவூர்- பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 350 மீட்டர் தூரத்தில், அரியலூர்- செந்துரை மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த நான்கு சாலையின் சந்திப்பு ரவுண்டானாவில் இருந்து மருத்துவமனை முன்பு வரை பஸ்கள், ஆட்டோக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்த மாநில நெடுஞ்சாலையை தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளில் வாசல் வரை பஸ்கள் வந்து செல்லும் வசதியும் உள்ளது. பஸ் நிறுத்தங்களும் உள்ளது. சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவமனைக்கு முன் பல நூறு கோடிகள் செலவு செய்து மெட்ரோ ஸ்டேஷன்கள் அமைக்கப்படுகின்றன. அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போக்குவரத்து மேம்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மருத்துவக்கல்லூரி வரை 4 வழி சாலை அமைக்க போதிய இடம் உள்ளதால் 4 வழி சாலையாக அமைக்க வேண்டும்.

வாகனங்களை நிறுத்தும் வசதி

அரியலூருக்கு வரும் அனைத்து பஸ்களும் மருத்துவமனை வாயில் வரை வந்து திருப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதனால் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மட்டும் இல்லாது பெரியார் நகர், காமராஜர் நகர், ஜெ.ஜெ.நகர், மாவட்ட விளையாட்டு மைதானம், அரசு கலை கல்லூரிக்கு வரும் சுமார் 3,000 மாணவ-மாணவிகளும் பயன்பெறுவார்கள்.

ஆகவே அனைத்து பஸ்களும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 350 மீட்டர் உள்ளே வந்து திருப்பி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக விரோத செயல்

குருமஞ்சாவடியை சேர்ந்த வெங்கடேசன்:- அரியலூர் மருத்துவக்கல்லூரி அமைச்சர் உதயநிதியால் திறந்து வைக்கப்பட்டு 2 மாதம் நெருங்கும் நிலையில் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி கிடக்கிறது. 700 படுக்கைகள் இருந்தும் என்ன பலன். இன்றும் மக்கள் அவசர உயர் சிகிச்சைக்காக தஞ்சாவூரை சார்ந்தே உள்ளோம். அரியலூர் தஞ்சை தூரத்தை கடக்கும் முன்னே பல உயிர்கள் ஆம்புலன்சில் பறிபோகிறது. மருத்துவக்கல்லூரி திறந்தும் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் போனதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். எங்கள் ஊர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர் வருவார்களா? என்ற கேள்வி எழுகிறது. எனவே மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டால் மருத்துவ மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் பயன் பெறுவார்கள். திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராமல் போனால் அங்கே சமூக விரோத செயல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

அரியலூரை சேர்ந்த அருண் பாண்டியன்:- அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பெயரளவில் திறந்ததோடு சரி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. ரூ.347 கோடியில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டன. ஆனால் இன்று எந்த நோக்கத்திற்காக கட்டிடங்கள் கட்டப்பட்டனவோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. புதிய மருத்துவமனையில் சட்டமன்ற கூட்ட தொடரின்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வாங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை திறந்தால் தானே அது பயன்பாட்டிற்கு வரும். அதுவரை நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் சிரமப்பட்டு கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழிக்கேற்ப கட்டிடங்கள் கட்டப்பட்டாலும் பயன்பாடற்ற சூழலில் உள்ளது. மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறை அமைச்சரும், போக்குவரத்துதுறை அமைச்சரும் இதுகுறித்து கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்து நோயாளிகளை காக்க வேண்டும்.

அதிர்ச்சி அளிக்கிறது

அரியலூரை சேர்ந்த அருள்:- அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அடிப்படை வசதிகள் இல்லாமல் ஏன் அவசரகதியாக திறக்கப்பட்டது என்று தெரியவில்லை. பொதுவாக அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் ஏழைகள். அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகின்றனர். சிலருக்கு எதிர்பாராத விதமாக மேல் சிகிச்சை பெற்று கொள்ள அருகிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது மிகவும் வேதனைக்குரியது. அதேபோல் 24 மணி நேரமும் சி.டி. ஸ்கேன் எடுக்க போதிய ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்பது வருத்தப்பட கூடிய விஷயம். மேலும் இங்கு போதுமான மின் வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. எனவே மருத்துவக்கல்லூரியை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.  

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-அரியலூரில் கட்டப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீயணைப்பு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அனுமதி, மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான எந்த அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை. தொடர்ந்து குடியிருப்புகள் மற்றும் விடுதிகளுக்கான மின் இணைப்பு தொகைக்கான அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. மேலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு 6,50,000 லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இதற்காக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு கடிதம் அனுப்பியும் இதுநாள் வரை தீர்வு காணப்படவில்லை. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் வழங்கப்பட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் டயாலிசிஸ் பிரிவுகளை சிறப்பாக செயல்படுத்த முடியும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலிருந்து இணைப்பு கொடுக்கப்படவில்லை. இவைகள் அனைத்தையும் விரைவாக பொதுப்பணித்துறை ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ஒரு வாரத்திற்குள் கொண்டு வர முடியும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்