இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேர் கைது

பேக்கரி கடைக்காரரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்தது தொடர்பான வழக்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கல்லல் ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-05-31 00:15 IST

சிவகங்கை,

பேக்கரி கடைக்காரரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்தது தொடர்பான வழக்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கல்லல் ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.50 லட்சம் பறிப்பு

சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி கடை நடத்தியவர் நாச்சியப்பன் (வயது 55). இவர், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த சிறுமியின் உறவினர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக நாச்சியப்பனை சிலர் மிரட்டி ரூ.50 லட்சம் வரை பறித்துக்்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நாச்சியப்பன், புதுக்கோட்டை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயார், தன்னுடைய மகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் மதுரை ஐகோட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

அதேபோல், நாச்சியப்பனின் மனைவி சகுந்தலாதேவி தன்னுடைய கணவர் நாச்சியப்பன் மீது பாலியல் புகார் கூறி, அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டு மிரட்டியதால் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும், எனவே இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து, இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு பெலிக்ஸ் சுரேஷ் பீட்டருக்கு ஐகோா்ட்டு உத்தரவிட்டது.

பின்னர் துணை சூப்பிரண்டு தலைமையில் சிவகங்கை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கீதாராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

ஒன்றிய செயலாளர் கைது

இந்த விசாரணையில், சகுந்தலாதேவி கொடுத்த புகாரில் கூறியபடி நாச்சியப்பனிடம் பணம் பறித்தது உண்மை என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கல்லல் ஒன்றிய செயலாளர் குணாளன் (45) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவரை சிவகங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் தேவகோட்டையை சேர்ந்த பாலாஜி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்