நிர்வாண படங்களை வெளியிடுவதாக மிரட்டல்:கள்ளக்காதலியை உல்லாசத்திற்கு அழைத்த எல்.ஐ.சி. முகவர் கைது
சேலத்தில் கள்ளக்காதலியின் நிர்வாண படங்களை வெளியிடுவதாக மிரட்டி அவரை உல்லாசத்திற்கு அழைத்த எல்.ஐ.சி. முகவரை போலீசார் கைது செய்தனர்.;
சேலம் சன்னியாசிகுண்டுவை அடுத்த சங்கிலி ஆசாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 35). எல்.ஐ.சி. முகவரான இவருக்கும், அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆன 38 வயதான பெண் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் வாய்ப்பு கிடைக்கும்போது அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.
இதனிடையே, கள்ளக்காதலன் கதிர்வேலின் நடவடிக்கை நாளடைவில் அந்த பெண்ணுக்கு பிடிக்காமல் போனதால் அவரை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலியான அந்த பெண்ணுக்கு கதிர்வேல் போன் செய்துள்ளார்.
அப்போது அவர் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் இருவரும் நெருக்கமாக இருந்தபோது எடுத்த நிர்வாண படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கதிர்வேல் அழைத்த இடத்திற்கு சென்றபோது, அவரை மிரட்டி உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
உடனே அங்கிருந்து தப்பி வந்த அந்த பெண் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எல்.ஐ.சி. முகவர் கதிர்வேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்து அதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆபாச படம், வீடியோ எதுவும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.