கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்

திருச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம்.கார்டுகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினார்கள்.;

Update:2023-09-16 01:13 IST

திருச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம்.கார்டுகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினார்கள்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான நேற்று காஞ்சீபுரத்தில் நடந்த விழாவில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில், நடைபெற்ற விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் 2 ஆயிரம் பேருக்கு வங்கி ஏ.டி.எம்.கார்டுகளை வழங்கினர்.

அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்கள்

மேலும், மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த சிறப்பாக பணிபுரிந்த 25 அரசு அலுவலர்களுக்கு அமைச்சர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து அரசுத்துறைகளில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, உயிர்நீத்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் அமைச்சர்கள் வழங்கினார்கள்.

விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, போலீஸ் துணை கமிஷனர் செல்வகுமார், எம்.எல்.ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், அப்துல்சமது, மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ராட்சத பலூன்

மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க நிகழ்ச்சியையொட்டி திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை ரவுண்டானா பகுதியில் தி.மு.க. தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்மகேஷ்பொய்யாமொழி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்