காட்டு யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

அய்யன்கொல்லி பஜாருக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2022-08-06 14:06 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பஜாரில் நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் புகுந்தன. ஜனார்த்தனன் என்பவரது கடையின் இரும்பு கதவை உடைத்தது. அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. பின்னர் யானகள் சாலையில் நடந்து சென்ற போது, அரசு உண்டு உறைவிட பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தியது. பள்ளி வளாகத்தில் இருந்த பலா பழங்களை தின்றன. தகவல் அறிந்த பிதிர்காடு வனகாப்பாளர்கள் ராமசந்திரன், ராஜேஸ்குமார், சேரம்பாடி வனகாப்பாளர் மணிகண்டன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால், பள்ளி வளாகத்தை விட்டு செல்லவில்லை. இந்தநிலையில் நேற்று காலை பள்ளி நுழைவுவாயில் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 2 யானைகள் அய்யன்கொல்லி பஜாருக்குள் நுழைந்து சாலையில் ஓடியது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். மேலும் வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் மழவன் சேரம்பாடியில் 7 காட்டு யானைகள் புகுந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. ரவிச்சந்திரன் என்பவரது வீட்டின் குளியல் அறை, தண்ணீர் தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தின. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்