மாணவர்களை தாக்கிய உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

செஞ்சி அரசு பள்ளியில் மாணவர்களை தாக்கிய உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மாணவர்களை தாக்கியதை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது;

Update:2022-07-20 23:15 IST

செஞ்சி

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பிளஸ்-2 வகுப்பில் ஏ-1, ஏ-2 என 2 பிரிவுகளில் 105 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் நேற்று முன் தினம் 96 மாணவர்கள் வகுப்புக்கு வந்திருந்தனர். இவர்களுக்கு உதவி தலைமை ஆசிரியரும், இயற்பியல் ஆசிரியருமான நந்தகோபால் மாதிரி தேர்வு நடத்தினார். பகல் 12 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் வைத்து தேர்வு நடைபெற்றது.

பிரம்பால் அடித்தார்

ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் மாணவர்கள் சரியாக தேர்வு எழுதாமல் இருந்ததாக கூறி ஆசிரியர் நந்தகோபால் தான் கையில் வைத்திருந்த பிரம்பால் மாணவர்களை முதுகு மற்றும் கையில் சரமாரியாக அடித்தார். இதில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதுகு மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டது. பின்னர் மாலையில் வீட்டுக்கு சென்ற மாணவர்கள் பள்ளியில் ஆசிரியர் பிரம்பால் முதுகு மற்றும் கைகளில் தாக்கியது பற்றி தங்கள் பெற்றோரிடம் கூறினர். மாணவர்கள் உடலில் இருந்த காயங்களை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பெற்றோர் முற்றுகை

இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று காலை பள்ளியின் முன்பு திரண்டனர். பின்னர் பள்ளிக்கூடம் திறந்ததும் அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு அங்கிருந்த ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த செஞ்சி தாசில்தார் நெகருன்னிசா, ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், தலைமை ஆசிரியர் கணபதி ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆசிரியர் பணியிடை நீக்கம்

இந்நிலையில் மாணவர்களை ஆசிரியர் தாக்கிய சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக கலெக்டர் மோகன் பரிந்துரையின் பேரில் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா மேற்படி இயற்பியல் ஆசிரியர் நந்தகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடம் விசாரணை

இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று பள்ளி மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறாா். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை தாக்கிய ஆசிரியரை கண்டித்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்ட சம்பவம் செஞ்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்