திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுமா?

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;

Update:2023-02-16 01:32 IST

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அரசு மருத்துவமனை

திருச்சி அரசு மருத்துவமனைக்கு உள்நோயாளிகளாக 1,600 பேரும், புறநோயாளிகளாக 3 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் வந்து செல்கிறார்கள். இவர்களை தவிர நோயாளிகளின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் முதல் 10 ஆயிரம் பேர் வரை வந்து செல்கிறார்கள்.

இதனால் அரசு மருத்துவமனை வளாகம் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சைபிரிவு, முடநீக்கியியல் பிரிவு, மனநல சிகிச்சை பிரிவு, இருதயசிகிச்சைபிரிவு, மூளைநரம்பியல் சிகிச்சை பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளன.

இங்கு திருச்சி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகிறார்கள்.

அவசர பணத்தேவை

இதேபோல் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் திடீர் விபத்துகளால் காயம் அடைபவர்களையும் பெரும்பாலும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு தான் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வருவார்கள். இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு பணத்தேவை முக்கியமானதாக உள்ளது.

அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை தான் என்றாலும், நோயாளிகளுக்கும், அவர்களுடன் தங்கி இருப்பவர்களுக்கு உணவுபொருட்கள் வாங்கவும், நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுப்பதற்கும், தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு வழங்கவும் என பல்வேறு வகைகளிலான செலவுகளுக்கு பணம் அவசியமானதாக உள்ளது. பொதுவாக ஏ.டி.எம். மையங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைப்பது வழக்கம். ஆனால் அரசு மருத்துவமனையில் நிரந்தர ஏ.டி.எம். வசதி என்பது கிடையாது.

ஏ.டி.எம். மையம்

அவ்வப்போது காலை நேரங்களில் நடமாடும் ஏ.டி.எம். எந்திரம் மட்டுமே வந்து செல்கிறது. ஆனால் அந்த ஏ.டி.எம். எந்திரமும் பகல் 1 மணியுடன் மருத்துவமனையில் இருந்து சென்று விடுகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்து வருபவர்கள் கையில் பணம் இல்லாமல் ஏ.டி.எம். மையம் எங்குள்ளது என தேடி அலைய வேண்டிய நிலை தான் உள்ளது. அவசர பணத்தேவைக்கு அரசு மருத்துவமனையை விட்டு வெளியே சென்று மெயின்ரோட்டை கடந்து சிறிது தொலைவில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு தான் செல்ல வேண்டும்.

ஒருவேளை அங்கு ஏ.டி.எம். எந்திரம் வேலை செய்யவில்லையென்றால் சுமார் ½ கிலோ மீட்டர் தூரமுள்ள புத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு தான் செல்ல வேண்டும். இதனால் நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே மருத்துவமனை வளாகத்தில் நிரந்தரமாக ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

கலெக்டரிடம் மனு

அல்லூரை சேர்ந்த திருவேங்கடம்:- திருச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். ஸ்கேன் எடுக்கவோ, மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகளின் உறவினர்களிடம் கொடுக்கவோ பணம் தேவைப்படும். இதற்கு மெயின்ரோட்டை தாண்டி சிறிது தொலைவில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு தான் செல்ல வேண்டும். இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு கொடுக்க பணம் தேவைப்படும். அரசு மருத்துவமனையில் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் என ஏற்கனவே கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். ஆகவே அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் ஏ.டி.எம். மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலைச்சல் குறையும்

எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த ரமேஷ்:- அரசு மருத்துவமனை வளாகத்தில் நிரந்தரமாக ஏ.டி.எம். மையம் அமைப்பதால் மக்களுக்கு அலைச்சல் குறையும். விபத்து நேரத்தில் பதற்றத்துடன் வருபவர்கள் பணம் எடுக்க ரோட்டை கடந்து செல்ல வேண்டியது இல்லை. ஒருவேளை சிறிது தூரம் சென்று ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் அதை பாதுகாப்பாக கொண்டு வர வேண்டும். யாராவது மர்ம நபர்கள் வழிப்பறி செய்து விடவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மருத்துவமனை வளாகத்தில் ஏ.டி.எம். இருந்தால் எப்போது டாக்டர்கள், செவிலியர்கள், மக்கள் நடமாட்டம் இருக்கும். பயப்பட தேவையில்லை.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை

துறையூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்குமார்:- இந்த மருத்துவமனையில் ஏ.டி.எம். இல்லாததால் வெளியே சென்று பணம் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. ஆனால் இங்கோ ஒன்றுகூட இல்லை. வாரந்தோறும் ஒரு சில நாட்களில் மட்டுமே நடமாடும் ஏ.டி.எம். வாகனம் இங்கு நிற்கிறது. அதுவும் மதியத்திற்கு பிறகு சென்று விடுகிறது. இரவில் பணம் எடுக்க வேண்டும் என்றால் வெளியே உள்ள ஏ.டி.எம். மையத்தை தேட வேண்டிய நிலை இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த மருத்துவமனை வளாகத்தில் ஏ.டி.எம். மையம் அமைத்தால் என்னைப்போன்ற பலரும் பயனடைவார்கள்.

பரிசீலிக்க நடவடிக்கை

திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு:- திருச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இடப்பற்றாக்குறையும் நிலவி வருகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் பணத்தேவைக்காக நடமாடும் ஏ.டி.எம். எந்திரம் தினமும் மருத்துவமனை வளாகத்தில் காலை முதல் பகல் 1 மணி வரை நிறுத்தப்படுகிறது. ஆனாலும் மாலை நேரம், இரவு நேரங்களில் பொதுமக்களின் பணத்தேவைக்காக நிரந்தர ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் என மக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைத்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்