ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்தவர் மீது தாக்குதல்

ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2022-05-22 20:26 GMT

சமயபுரம்:

சிறுகனூர் அருகே உள்ள சரடமங்கலத்தை சேர்ந்தவர் முத்து(வயது 42). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன்(40), அவரது தம்பி அசோகன்(38) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடத்துவது சம்பந்தமாக லால்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் தெரிகிறது. இதற்கிடையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது சம்பந்தமாக ஆலோசிப்பதற்காக நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் விழாகுழுவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தம்பி அசோகன் உள்ளிட்டோர் கூட்டம் போட்டதாகவும், இதில் கலந்துகொண்ட முத்து, ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், அசோகன் ஆகியோர் கட்டையால் முத்துவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 10 தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே முத்து தங்களை தாக்கியதாக பாலகிருஷ்ணன் மற்றும் அசோகன் ஆகியோர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். இந்நிலையில் முத்து மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் இருதரப்பினர் மீதும் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்