இளம்பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டு தற்கொலை செய்த வங்கி ஊழியர் - உருக்கமான கடிதம்

ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார்.

Update: 2024-04-05 09:00 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் காந்திகுப்பத்தை சேர்ந்த பாவாடை என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 27). பி.டெக் பட்டதாரி. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இவரும் 26 வயது இளம்பெண் ஒருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த இளம்பெண், ராதாகிருஷ்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆவதால், ஓராண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி காலத்தை கடத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த இளம்பெண் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் வீட்டாரிடம் பேசி, அவர்களை சமாதானம் செய்தார்கள்.

மாலை 4.30 மணியளவில் போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதன்பிறகு ராதாகிருஷ்ணன் தனது மனைவி வீட்டிற்கு சென்றார். இரவு சிறிது நேரம் தங்கி இருந்த அவர் மனைவியிடம் எனது வீட்டுக்கு சென்றுவிட்டு, காலையில் வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்றார்.

இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்வதற்கு முன்பு உருக்கமாக எழுதிய கடிதம் மற்றும் செல்போன் வாட்ஸ்அப் பதிவை போலீசார் கைப்பற்றி உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு இது பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தையும் அழித்து விடுவேன் என மிரட்டினர். எனவே அவர்கள் தான் என் சாவுக்கு முழுக்க முழுக்க காரணம். எனக்கு விருப்பம் இல்லாமல் இந்த வாழ்க்கையை என்னால் வாழ முடியாது என்று கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து ராதாகிருஷ்ணனின் தந்தை பாவாடை தனது மகன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். அதன்பேரில், காந்திகுப்பத்தை சேர்ந்த 5 பேர் ராதாகிருஷ்ணனை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்