வீடுகள் ஒதுக்க கூடுதல் பணம் கேட்பதாக பயனாளிகள் குற்றச்சாட்டு

வீடுகள் ஒதுக்க கூடுதல் பணம் கேட்பதாக பயனாளிகள் குற்றச்சாட்டாக கூறினர்.

Update: 2023-06-04 18:53 GMT

அறந்தாங்கி ஊராட்சி கூத்தாடிவயல் கிராமத்தில் குரும்பக்காடு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 120 குடியிருப்புகளை கொண்ட 3 அடுக்குமாடி கட்டிடங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வருகிறது. இதில் கஜாபுயலால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் நகர்ப்புறத்தில் குடிசைகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள் வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சரிபார்க்கப்பட்டு உரியவர்களுக்கு வீடுகள் வழங்க பரிந்துரைக்கப்பட்டது. அதனடிப்படையில் 120 பயனாளிகளிடமிருந்து தலா ரூ.1 லட்சம் நிர்வாகம் சார்பில் பெறப்பட்டது. மேலும் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கும் தருவாயில் இருந்தது. இந்நிலையில், மீண்டும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கட்ட வேண்டும் என நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயனாளிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், நாங்கள் இருக்க வீடு இன்றி வாழ்ந்து வருகிறோம். அரசின் சார்பில் இலவச வீடுகளை நம்பி வந்தோம். ரூ.1 லட்சம் கட்டினால் போதும் என்றனர். ஆனால் தற்போது கூடுதலாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கட்ட சொல்கிறார்கள். எனவே இதனை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இந்த திட்டத்தின் மதிப்பீடு அதிகம் என்பதால் வீடுகளுக்கு கூடுதலாக பணம் கேட்கப்படுகிறது. பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படுவதற்கு முன்பே இந்த தொகை உயரும் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்