பட்டத்துளசியம்மன் கோவில் திருவிழா

கோத்தகிரி அருகே பட்டத்துளசியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடங்களை எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-05-31 21:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே பட்டத்துளசியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடங்களை எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

கோவில் திருவிழா

கோத்தகிரி-குன்னூர் சாலை கிருஷ்ணா புதூர் கிராமத்தில் பட்டத்துளசியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் கடந்த 22-ந் தேதி 33-வது ஆண்டு திருவிழா பூவரம் வேண்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 23-ந் தேதி பாண்டியன் பூங்கா பகுதியில் இருந்து அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து வருதல், 24-ந் தேதி கணபதி ஹோமம், கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. 28-ந் தேதி சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடத்தப்பட்டு, கன்னி மாரியம்மன் கோவிலில் இருந்து சக்திவேல் எடுத்து கிராமம் முழுவதும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, 29-ந் தேதி காலை மதுரை வீரன், முனீஸ்வரர் பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை பாண்டியன் பூங்கா பால் குளிரூட்டும் நிலைய ஆற்றங்கரையில் இருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

மஞ்சள் நீராடுதல்

இதில் பக்தர்கள் கரகம், பால்குடங்களை எடுத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது அருளாளி ஒருவர் உயிருடன் உள்ள கோழியின் கழுத்தைக் கடித்து, அதன் ரத்தத்தை குடித்து கறியை தின்றவாறு வந்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. ஊர்வலம் கோவிலை வந்தடைந்தவுடன் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 1 மணிக்கு உச்சி பூஜையும், மாலை 3 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

இன்று (வியாழக்கிழமை) அபிஷேக அலங்கார பூஜை, மஞ்சள் நீராடுதல், உற்சவ மூர்த்தி சிலை எடுத்து ஊருக்குள் பவனி வருதல், அம்மனை கரை சேர்த்து ஆற்றங்கரையில் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 7-ந் தேதி மறு பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்