நெல் கொள்முதல் செய்ய உழவர்களிடம் லஞ்சம் - விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

உழவர்களிடமிருந்து நெல் கொள்முதலுக்கு லஞ்சம் கோரப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-02-17 08:49 GMT

சென்னை,

காவிரி பாசன மாவட்ட உழவர்களிடமிருந்து நெல் கொள்முதலுக்கு கையூட்டு கோரப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.125 கட்டாய கையூட்டாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதைக் கண்டித்து கும்பகோணத்தில் உழவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஒரு குவிண்டால் நெல்லை ரூ.2115 என்ற விலையில் கொள்முதல் செய்கிறது. அதில் கையூட்டாக கோரப்படும் தொகையின் மதிப்பு 6% ஆகும். நெல் சாகுபடியில் உழவர்களுக்கு லாபமே அந்த அளவுக்கு கிடைக்காது என்ற நிலையில், அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பது நியாயமல்ல.

நெல் கொள்முதல் செய்வதற்காக உழவர்களிடமிருந்து கையூட்டு வசூலிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. அதை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான சொற்களால் கண்டித்துள்ளது. அதன் பிறகும் உழவர்களிடமிருந்து பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது.

காவிரி பாசன மாவட்ட உழவர்களிடமிருந்து நெல் கொள்முதலுக்கு கையூட்டு கோரப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உழவர்களை தொல்லைப்படுத்தாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்