ஈரோட்டில் திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் வந்து அரசு தேர்வு எழுதிய மணப்பெண்

திருமணம் முடித்த கையோடு வினோத்குமார் தனது மனைவி ஹரிணியை இருசக்கர வாகனத்தில் தேர்வு மையத்திற்கு அழைத்து வந்தார்.;

Update:2022-12-04 17:11 IST

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பி.காம். பட்டதாரி ஹரிணி. இவருக்கும் வினோத்குமார் என்பவருக்கும் இன்றைய தினம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே அரசு வேலைக்கு முயற்சித்து வரும் ஹரிணி, கிராம நிர்வாக உதவியாளருக்கான தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தார். சரியாக திருமணம் நடைபெறும் நாளன்று தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து மணமகன் வினோத்குமாரின் குடும்பத்தினரிடம் ஹரிணி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று திருமணம் முடித்த கையோடு வினோத்குமார் தனது மனைவி ஹரிணியை இருசக்கர வாகனத்தில் தேர்வு மையத்திற்கு அழைத்து வந்தார். மணக்கோலத்தில் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதிய ஹரிணியை கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இதே போல் மற்றொரு மணப்பெண் சங்கமித்ரா என்பவர், திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்திருந்தார். ஆனால் தேர்வு மையத்திற்கு காலதாமதாக வந்ததால், அவரை அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்