சூளகிரி அருகே15 நாட்களாக பராமரிக்கப்பட்ட 5 ஒட்டகங்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு

Update: 2023-04-15 19:00 GMT

சூளகிரி:

சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த 15 நாட்களாக 5 ஒட்டகங்கள் கட்டப்பட்டிருந்தன. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்த நபர்களிடம் விவரம் கேட்க முயன்றபோது அவர்கள், அந்த ஒட்டகங்களை விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் சூளகிரி போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு ஒட்டகங்கள் தமிழகத்திற்கு அனுமதியின்றி இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டதா? என விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒட்டகங்களை விட்டு தப்பியோடிய நபர்களை தேடி வந்தனர்.

இதனிடையே போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அந்த பகுதியில் ஒரு கூடாரம் அமைத்து 5 ஒட்டகங்களையும் கடந்த 15 நாட்களாக பராமரித்து வந்தனர். இந்த நிலையில் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, ஒட்டகங்களை கோசாலைக்கு அனுப்ப பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் சென்னையை சேர்ந்த தனியார் அமைப்பு 5 ஒட்டகங்களை மீட்டு சென்று பராமரிக்க முன்வந்தது. இதையடுத்து நேற்று மாலை 5 ஒட்டகங்களும் சென்னைக்கு லாரியில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்