ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது;

Update:2023-08-27 00:15 IST

காரைக்குடி

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் தற்போதைய தலைவர் பொறுப்பேற்பதற்கு முன் ரூ.1 கோடியே 36 லட்சம் ஊராட்சி நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த விசாரணை தேவை என காரைக்குடியை சேர்ந்த ராமநாதன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து 4 வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஊராட்சி தலைவர் தேவி சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை செல்போனில் பார்த்தபோது அலுவலகத்தில் ஆள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து வடக்கு போலீசார் அங்கு சென்றபோது அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் அண்ணாமலை இருந்தார். அவரிடம் விசாரித்தபோது வேலைப்பளு காரணமாக கூடுதல் நேரம் வேலை செய்கிறேன் என்றார். ஆனால் ஊராட்சி தலைவர் தரப்பினர் முறைகேடு குறித்து ஐகோர்ட்டு விசாரணையை தொடங்கியிருப்பதால் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை அழிக்கவும், சிலவற்றை எடுத்து செல்லவும், கணினியில் உள்ள சம்பத்தப்பட்ட ஆவணங்களை அழிக்கவும் முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் சில ஆவணங்களை அண்ணாமலை காரிலிருந்து போலீசார் கைப்பற்றினராம். அவருடைய செல்போனை போலீசார் கைப்பற்றி அண்ணாமலை யாரிடம் செல்போனில் பேசினார் என விசாரணை நடத்தினர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரின் புகாரின் பேரில் ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்