தனியார் பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

திராவகம் கலந்த குளிர்பானம் குடித்ததில் சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்.;

Update:2022-10-20 02:41 IST

களியக்காவிளை:

திராவகம்கலந்த குளிர்பானம் குடித்ததில் சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்.

திராவகம் கலந்த குளிர்பானம்

களியக்காவிளை அருகே நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் அஸ்வின் (வயது 11) அதங்கோடு பகுதியில் உள்ள மாயா கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி அன்று அஸ்வினுக்கு அதே பள்ளியின் சீருடை அணிந்த ஒருவர் திராவகம் கலந்த குளிர்பானத்தை கலந்து கொடுத்ததாகவும், அதை குடித்த 2 நாட்களுக்கு பிறகு அஸ்வினின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

சிறுவன் சாவு

பின்னர் அவரை நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். மேலும் இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வினுக்கு குளிர்பானம் கலந்து கொடுத்த நபர் யாரென்று விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே சிகிச்சை பலனின்றி அஸ்வின் பரிதாபமாக இறந்தான். ஆனால் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

சி.பி.சி.ஐ.டி விசாரணை

இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்படி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாயா கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் விசாரணையை தொடங்கினர். நெல்லை மண்டல துணை சூப்பிரண்டு சங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையில் போலீசார் நேரில் சென்று பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்ட விவரங்களை பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டதாக தெரிகிறது.

இதேபோல் பள்ளி வளாகத்தையும் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக மாணவனின் பெற்றோரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்