மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் காலி பணியிடங்கள் அறிவிப்பு: போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சிவகுப்புகள் - கலெக்டர் தகவல்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-15 09:52 GMT

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமானவரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல காலி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு கல்வித்தகுதி பட்டதாரி ஆகும்.


வயதுவரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும். வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி) 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஒ.பி.சி) 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு.


மொத்த பணிக்காலியிடங்கள் தோரயமாக 7 ஆயிரம் (இந்தியா முழுவதும்). இந்த பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் 3-ந்தேதி ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம்.


செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சிவகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த தேர்விற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் சான்று விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டும், 044-27426020 என்ற தொலைபேசி எண்ணில் இந்த மாதம் 28-ந்தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறும் அல்லது https://forms.gle/YA2vYJ1AFjUYAd7 என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்